உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் புயல், சுனாமி, மழை வெள்ளம் மற்றும் வறட்சி உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கவும் முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டில் செயல்படுகிறது. மாநிலத்தில் ஏற்படும் பேரிடர் காலங்களில் நிவாரணப்பணிகளை பேரிடர் மேலாண்மை ஆணையம் பகிர்ந்து வழங்கும். மேலாண்மை ஆணையத்தோடு மாநில அளவிலான நடவடிக்கைக் குழுவும் இணைந்து செயல்படும்.

பேரிடர் காலங்களில் மாநில வருவாய்த் துறைச் செயலாளர், ராணுவம் மற்றும் துணை ராணுவம், ஊர்காவல் படை, ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு துறை முதலியவற்றுடன் தொடர்பு கொண்டு அவர்களின் உதவியை பெறுவார். நிவாரணப் பணிகளுக்காக மாநில நிவாரண ஆணையருக்குத் தேவைப்படும் நிதியையும் அரசு வருவாய்த் துறை வழங்கும்.

பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளும் பணிகள்

[தொகு]
  • பேரிடர் கொள்கைகளில் உரிய பரிந்துரைகளை சமர்ப்பித்தல்
  • பேரிடருக்குப் பிறகு நிவாரணம் வழங்குவதற்கான வழிமுறைகள்
  • மாநிலப் பேரிடர் மேலாண்மை திட்டத்துக்கு அனுமதி வழங்குதல்
  • பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுதல்
  • பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வுப் பணிகளை தொடர்ந்து கண்காணித்தல்

பேரிடர் காலத்தில் உடனிணைந்து பணியாற்றுவோர்

[தொகு]
  • மாநில நிவாரண ஆணையர் தலைமையில் வருவாய் நிர்வாகத்தின் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புத் துறை
  • மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான மாவட்ட நிர்வாகம்
  • வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாச்சியர் உள்ளிட்டோர் அடங்கிய கோட்ட அளவிலான குழுக்கள், உள்ளாட்சி அமைப்புகள்
  • தன்னார்வ தொண்டு அமைப்புகள்
  • அரசு நிறுவனங்கள் மற்றும் அரசுசாராத நிறுவனங்கள்

அவசரகால நடவடிக்கைக் குழு

[தொகு]

பேரிடர் காலங்களில் மாநில நிவாரண ஆணையர் தலைமையில் அவசர கால நடவடிக்கைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழு மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நடவடிக்கைகளின் முகமையாக இருக்கும். மாநில அளவிலான திட்டங்கள் மாநில நிவாரண ஆணையரால் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற துறைகளோடு கலந்தலாசித்து வகுக்கப்படும். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணமும் மாநில நிவாரண ஆணையரால் பேரிடர் மேலாணமை ஆணையகத்திற்கு பரிந்துரைக்கப்படும்.

மாவட்டக் குழுக்கள்

[தொகு]

மாவட்ட அளவிலான அவசரகால நடவடிக்கைக் குழுக்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும். பேரிடர் காலத்தின்போது ராணுவம் மற்றும் துணை ராணுவப் படை, ரயில்வே, தொலைத்தொடர்பு துறை ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் இணைந்து பணியாற்ற வேண்டும். காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், வனத்துறையினர் உள்ளிட்ட அனைத்து அரசுப் பணியாளர்களும் மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் பணியாற்ற வேண்டும்.

பேரிடர் மேலாண்மைக்கு நன்கொடை

[தொகு]

பேரிடர் காலங்களில் பன்னாட்டு, தேசிய அளவிலான அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பேரிடர் மேலாண்மை நிதியுதவிகளைப் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டும். மேலும் பெறும் நிதிக்கான கணக்கைப் பராமரிக்க வேண்டும்.

இதனையும் காண்க

[தொகு]

ஆதாரம்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை [1]